Wednesday, October 26, 2011

ஏழாம் அரிப்பு




தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அர்ப்பணித்து தொலைத்திருக்கிறார்கள். (உலகத்தமிழர்களுக்கு அர்'பணம்'. தெலுகு டப்பிங் உலக 'தெலுகர்களுக்கு அர்ப்பணம் போல.) எங்கே படத்தை பார்க்காமல் போனால் தமிழன் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் தேவி தியேட்டரை நோக்கி வண்டியை விட்டார்.

ஆட்டோ அர்னால்ட். ஒரு மழை நாள். மங்காத்தா கட் அவுட்டில் மார்க்கண்டேயன் அஜித்தை, மார்பளவு திரிஷாவை, தொடையளவு லஷ்மிராயை தொலைநோக்கு பார்வை பார்த்தபடி வந்ததில் ஒரு டூ வீலர் மீது டமாரென்று மோதிவிட்டார். மோதிய வேகத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.ஆக்ரோஷமாக டூ வீலர் ஆசாமியை நோக்கி...

"ஏய் ...த்தா அறிவில்ல. சிட்டியுள்ள டூ வீலர் ஓட்டுற. எத்தன பேருட கிளம்பியிருக்கீங்க. பச்சவன் தான நீ....கேக்குறேன் பச்சவன் தானே நீ....நீயே இப்படி தப்பு பண்ணா மத்தவன் எப்படியா ஒழுங்கா போவான்....ஊட்டுக்கு போற நேரத்துல டூ வீலர் ஓட்டிகினு கடுப்ப கெளப்புறானுங்க.....கெளம்பு கெளம்பு சிக்னல் போட்டான்.....இல்லாங்காட்டி டார் ஆயிருப்ப......"

டூ வீலர் ஆசாமி ஒரே முறுக்கில் அந்த இடத்தை விட்டு தன்னைத்தானே அப்புறப்படுத்திக்கொண்டார். கொஞ்ச தூரம் போயிட்டு யோசிச்சாரு.

"ஆமா....நாம என்ன தப்பு பண்ணோம். ஒரு ஆட்டோக்காரன் கிட்ட பப்ளிக்கா ஒரு சிக்னல்ல இப்படி அழுகிப்போன தமிழ்ல அர்ச்சன வாங்குற அளவுக்கு நாம என்ன தப்பு பண்ணோம்? ஏதோ தப்பு பண்ணியிருப்போம்..... இல்லேன்னா ஆட்டோக்காரன் அவ்வளவு போர்ஸா இறங்கி திட்டமாட்டானே? "

"அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும் நாமளும் நாலு வார்த்தை திருப்பி திட்டியிருக்கலாமே. ஏன் திட்டல? பயம். ஏன் பயப்படுறோம்? ஏன் எனக்கு வீரமும் கோபமும் வரமாட்டேங்குது? இதுக்கெல்லாம் காரணம் நான் வரலாறு படிக்காதது தான். வரலாறு படிக்காம கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சது என்னோட குத்தம். உலகத்துக்கே வீரத்த கத்து கொடுத்த தமிழ் இன்னைக்கு வீல் சேருல போயிட்டு இருக்குன்னா அதுக்கு காரணம் நாம வரலாற மறந்தது தான். இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் ஒவ்வொரு தமிழன் கிட்டேயும் ஒரு திமிர் வருமுன்னு ஏ.ஆர். முருக்ஸ் வேற சொல்லியிருக்காரு. இது நாம பாத்தே ஆக வேண்டிய படம். ஒவ்வொரு தமிழனும் பாக்குறானோ இல்லையோ, இப்படி செய்யாத குத்தத்துக்காக ஆட்டோக்காரங்க கிட்ட அப்பு வாங்குற அப்பாவி தமிழன் ஒவ்வொருத்தனும் பாக்கவேண்டிய படம்." சாப்ட்வேர் என்ஜினியர் சாமிநாதன் தன் சகலைகள் சங்கமிக்கும் சத்யத்திற்கு படை எடுத்தார்.

ஆட்டோவில் பின்னால் அமர்ந்திருந்த விஜயநகர் அஜித் ஆட்டோ அர்னால்டின் திறமையை மெச்சினார்.
"தீபாவளிக்கு எந்த படம் பாக்கலாம்"

"அந்த படம் தான் . அந்த படத்துல ஏதோ இருக்குது"

"என்ன சார் பெருசா இருக்க போகுது ரெண்டு பாட்டு ரெண்டு பைட்டு....."

"அப்படியெல்லாம் இல்ல. அந்த படத்துல போதிதர்மர பத்தி சொல்லியிருக்காங்க. போதிதர்மர சீனா காரன் கொண்டாடுறான். நாம இங்க மறந்துட்டோம்"

"அட போ சார். நம்மாளு பொங்கல் கொண்டாடுறான் தீபாவளி கொண்டாடுறான் சீனா காரன் போதிதர்மர கொண்டாடுறான். நமக்கு பொங்கலுக்கு லீவு வுடுறான். அவங்களுக்கு போதிதர்மருக்கு லீவு வுடுவாங்க. இதுக்கு என்ன சார் ரொம்ப தான் அலட்டிக்கிற."

ஆட்டோ அர்னால்ட், கோயம்பேடு கோபால், ராயபுரம் சிவமணி, நொச்சிக்குப்பம் நோஞ்சான் இப்படி எல்லோரும் தீபாவளி அன்று காலை பத்து மணிக்கெல்லாம் தியேட்டரில் கூடிவிட்டார்கள். தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. எப்படியும் ஒவ்வொரு தியேட்டரின் வாசலிலும் ஒரு ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். சத்யம் தியேட்டர் வெளியே டிராபிக் ஜாம். ஊட்லண்ட்ஸ் தேவி ஆல்பர்ட் ஐநாக்ஸ் என்று எங்கும் கூட்டம். சென்னை மாநகரில் மட்டுமல்ல. மதுரை திருச்சி கோவை இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் இதே நிலமை தான்.

மறந்து போன தமிழ் வரலாற்றை புதுப்பிக்க வந்த கூட்டம்.

இது ஒன்றும் வரலாற்று நிகழ்வு அல்ல. இதற்கு முன்பும் இது போல் கூட்டம் கூடியிருக்கிறது. ரஜினிக்கு கமலுக்கு விஜய்க்கு அஜித்துக்கு....முதல் நாள் முதல் காட்சியை காண இதற்கு முன்பும் இந்த தமிழ் சமூகம் கூடியிருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் திரண்டிருப்பது படம் பார்ப்பதற்கு அல்ல. புரட்சி செய்ய.என்ன புரட்சி என்கிறீர்களா? வந்திருக்கும் யாரிடமும் டிக்கெட் இல்லை.

முதல் நாள் முதல் காட்சிக்கு இதுவரை ஒரு டிக்கெட் கூட போனியாகவில்லை. ஆனால் தியேட்டரின் முன்னே ஆயிரம் பேர் திரண்டு மௌனமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். கவுன்டரில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு அம்மா வாங்க அய்யா வாங்க என்று கூவாத குறை. ஆனா ஒரு பய டிக்கெட் வாங்க போகல.

ஒரு தாத்தா வந்து சீசன் டிக்கெட் இங்க கொடுப்பீங்களான்னு நக்கலடிச்சிட்டு போறாரு.


மணி 11 ஆகிறது....12.....1....2 மணி கூட ஆயிடிச்சு ஆனா ஒரு பய டிக்கெட் எடுத்து உள்ள போய் படம் பாக்குறதா இல்ல. ரெண்டு மணிக்கு மேல கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் கலைய ஆரம்பிக்க அடுத்த ஷோவுக்கு கூட்டம் கூடுகிறது. நிலைமை அதே தான். ஒருவரும் டிக்கெட் எடுத்து படம் பார்த்தபாடில்லை.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஆட்டோ அர்னால்டு டி.வி.க்கு அளித்த பேட்டியிலிருந்து.....

கேள்வி: எதுக்காக இந்த போராட்டம்?

திருப்பி அடிக்கணும் சார். எத்தன நாளைக்கு தான் அவனுங்க துரத்துறதும் நாங்க ஓடுறதுமா இருக்குறது. இதே பொழப்பா போச்சு சார். ஒரு படத்த எடுத்துட வேண்டியது. 50 கோடி பட்ஜெட்டுன்னா ஹீரோக்கு 25 கோடி. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ஒரு மாசம் முன்னாடி டி.வி.ல வந்துடுவானுங்க. அங்ஙனக்க உக்காந்து படத்த இப்படி எடுத்தோம் படத்த அப்படி எடுத்தோம் உழைச்சாரு கிழிச்சாருன்னு லெக்சர். இப்போ ஒண்ணு புதுசா கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஒவ்வொரு தமிழனும் பாக்க வேண்டிய படம் அப்படின்னு...ஒவ்வொரு தமிழனுக்கும் படத்த பாத்த உடனே கர்வம் வருமாம். தமிழன்ற திமிரு வருமாம்.

ஏன்யா வில்லன் கிட்ட முதல்ல அடிய வாங்குறதும் அப்பாலிக்க ஹீரோ திருப்பி அடிச்சு கிளைமாக்ஸ முடிக்கிறதும் ரஜினி காலத்து பார்முலா. இது தான் கதை. இதுக்கு எதுக்கு போதி தர்மருன்னு புரியல. சூரியா தம்பிய எதுக்கு மெகா சைஸ் ஊறுகா பாட்டில்ல தண்ணிய ரொப்பி ஊற வச்சாங்கன்னு புரியல. உனக்கு எல்லாமே வேணும் போதி தர்மர் வேணும்...பிரஷ்ஷா ஒரு லவ் சீக்வென்ஸ் வேணும் அப்புறம் ஒரு காதல் தோல்வி பாட்டு வேணும் (அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...மாதிரி) அப்புறம் ஒரு இன்ட்ரோ சாங் அதுவும் ஹீரோ சர்க்கஸ் கம்பெனியில வேல செஞ்சாலும் மல்டி நேஷனல் கம்பெனி ஓனர் மாதிரி செம பீட்டரா இருக்கணும் கூடவே அப்பப்ப டூயட், ஹீரோயின சாக்லேட் பாய் மாதிரி லவ் பண்ணணும் தொட்டுக்க தமிழ் பற்று தாமாஷ்பா நீ.

இது ஒவ்வொரு தமிழனும் பாக்கவேண்டிய படமா? காசு வேண்ணா சொல்லு பத்தோ நூறா மூஞ்சியில விட்டெறியிறேன். அதுக்காக தமிழ் பற்று அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் இந்த மாதிரி ஒரு படத்துக்கு சொல்லி எங்கள ஏமாத்தாத. மங்காத்தான்னு ஒரு படம் வந்தது பாத்தியா. அதுக்கும் ஹைப் இருந்திச்சு. அவன் தமிழன் பாக்க வேண்டிய படமுன்னு சொல்லி கூட்டம் சேக்கல. ஆனா கொடுத்த காசுக்கு கூடவே சேத்து கொடுத்தாண்டா கொய்யா. அது தான்டா படம். ஒரு குறைஞ்ச பட்ச தொழில் தர்மம் வேணாம்.

ஸ்க்ரீன் பிளேன்னு ஒண்ணு எழுதியிருக்கியே செம....அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்.

செக்ஸ்க்கு முன்னாடி போர் பிளே பண்ணணும்.
படம் எடுக்குறதுக்கு முன்னாடி ஸ்க்ரீன் பிளே பண்ணணுமுன்னு எங்க தாத்தா பேதி தர்மர் அப்பவே சொல்லியிருக்காரு. அது கூட உனக்கு தெரியாம போச்சே எப்படி?

இப்படி பில்ட் அப்ப ஏத்தி ஏத்தி முதல் வாரத்துல முழு கலெக்ஷன எடுக்கணுமுன்னு நெனைக்கிறீங்க இல்ல. அதுக்கு தான் இந்த ஆப்பு. எப்படி நீங்க சாணி மாதிரி ஒரு படத்த எடுத்து டி.வி.ல வந்து ஞானி மாதிரி பேசி ஏமாத்துறீங்க. அதே மாதிரி உங்க படம் ஓடுற தியேட்டருக்கு நாங்களும் படை எடுப்போம். ஆனா ஒரு பய டிக்கெட் வாங்கி படம் பாக்கமாட்டான்.

கேள்வி: பல பேரோட உழைப்ப இப்படி கேவலமா பேசுறீங்களே?

கோர்ட்டுல ஒரு கேஸ் நடந்திச்சு சார். கற்பழிப்பு கேஸ். குற்றவாளி ஒரு பொண்ண கதற கதற கற்பழிச்சிருக்கான். மூணு நாளு ரூம்ல அடச்சு வச்சு இருபது வாட்டி கற்பழிச்சிருக்கான். கோர்ட்டுல எல்லா ஆதாரமும் கொடுத்தாச்சு. எப்படியும் குத்தவாளிக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்குமுன்னு எல்லோரும் நம்பிகிட்டு இருந்தாங்க. ஆனா ஜட்ஜ் அவனுக்கு வெறும் ஆறு மாசம் ஜெயில் தண்டனை கொடுத்து தீர்ப்பு சொல்லிட்டாரு. எல்லாரும் கடுப்பாகி ஜட்ஜ் கிட்ட கேட்டாங்க. அப்போ அவரு சொன்னாரு "உழைப்ப பாருங்கய்யா....மூணு நாள்ள இருபது வாட்டி....அந்த உழைப்பு அதுக்கு நாம தலை வணங்கணும்.". இது தான் சார் தமிழ் சினிமால சில பேரு உழப்பு உழப்புன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க. மட்டமா ஒரு படம் எடுத்துட்டோமுண்ணு தெரிஞ்சா உடனே ஒளப்ப பாராட்டுங்கன்னு வந்துடுவாங்க.

கேள்வி: தமிழர்கள் தமிழ் வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்கிற நல்ல கருத்தை சொல்லும் படமல்லவா இது. அதை ஏன் இப்படி....

நிறுத்து சார். கிளைமாக்ஸ் பைட்டுல வில்லன அடிச்சு காலி பண்ணமா
"அப்படி போடு போடு போடு..."
"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா...."
அப்படின்னு பேக்ரவுண்டுல பாட்ட போட்டு ஹீரோயின கட்டி புடிச்சு அப்பீட் ஆயிருக்கணும். அத விட்டுட்டு கடைசியா சூர்யா ஒரு அட்வைஸ் பண்ணாரு பாருங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு. ஏதோ வரலாறு மஞ்சள் பேட்டன்ட் சாணி அப்படி இப்படின்னு சொன்னாரு பாருங்க.....கேமராவ டிக்கியில கட்டிகிட்டு பாரின் லொக்கேஷனுக்கு போய் பாட்டு எடுத்துட்டு வர்ற இவங்க மஞ்சள பத்தியும் சாணிய பத்தியும் சொல்றது என் மூஞ்சியில மனுஷ சாணியும் மாட்டு சாணியும் கலந்து அடிச்ச மாதிரி இருந்திச்சு சார்.

கேள்வி: தமிழர்கள் மறந்த போதி தர்மர கமர்ஷியலா மக்களுக்கு எடுத்து சொன்னது புதிய முயற்சி இல்லையா?

நிச்சயமா அது சாதனை தான். ஆனா அதை சரியா செய்யலையே. ஒண்ணு போதி தர்மரோட வாழ்க்கையை முழுசா எடுத்திருக்கணும். இல்லையா போதி தர்மர் ஒரு குங்பூ கலைஞர். அதனால தானே அவர சூஸ் பண்ணீங்க. ஏன் கணித மேதை ராமானுஜத்தை எடுத்துக்க வேண்டியது தானே. சரி போதி தர்மரோட குங்பூ கலையையும் நிகழ்கால சூர்யாவையும் வச்சு அதிரடியா ஒரு ஆக்ஷன் படம் எடுத்து தள்ளியிருக்கலாமே. நம்ம எந்திரன் சங்கர் கிட்ட கொடுத்தாலே போதி தர்மரோட அருள் வந்து சூர்யா அந்நியாயத்த தட்டி கேக்குற மாதிரி அந்நியன் வரிசையில ஒரு தர்மன் எடுத்திருப்பாரே.சொதப்பலா ஒரு படத்த எடுத்து சப்ப கட்டு கட்டி பேசாதீங்க. இதே தேவி தியேட்டர்ல உலக சினிமாவும் போடுறான் தமிழ் சினிமாவும் போடுறான். நாங்க ஒண்ணும் முட்டாள் இல்ல.

கேள்வி: நோக்கு வர்மம்.

நோக்கு வர்மம். அப்படின்னா என்ன சார்? கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க. நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே அழிச்சுக்குறதில்லையா? இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சார். வெறும் நோக்கு வர்மத்த மட்டும் வச்சே பாதி சீன ஓட்டிடலாமுன்னு நெனச்சா இப்படித்தான். கூகிள வச்சு டி.என்.ஏ ஆராய்ச்சி பண்ணா இப்படித்தான் ஆகும்.

கேள்வி: இவ்வளவு பேசுறீங்களே. நீங்க சொல்லுங்க. போதி தர்மர் கான்செப்ட வச்சு இத விட சிறப்பா ஒரு கமர்ஷியல் படம் செய்ய முடியுமா?

ஏன் முடியாது? இதே கதை தான். சூரியா ஒரு விவசாயி வீட்டு பிள்ளை. கோழையாவே வளந்தவரு. ஸ்ருதி ஆராய்ச்சி பண்ணி சூர்யா தான் போதி தர்மரோட வம்சம்ன்னு கண்டுபுடிக்கிறாங்க. சூர்யா கிட்ட வந்து போதி தர்மர பத்தி சொல்றாங்க. அவரோட சிறப்ப சொல்றாங்க. கொஞ்ச கொஞ்சமா சூர்யா டிரான்ஸ்பார்ம் ஆகுறாரு. நாம் தான் போதி தர்மரோட தலைமுறைங்குற கர்வம் அவருக்கு வருது. தனக்குள்ள ஓடுறது போதி தர்மரோட இரத்தம். கொஞ்சம் கொஞ்சமா போதி தர்மராவே தன்னை உணர்றாரு. அவருக்கு போதி தர்மரோட அசாத்திய சக்திகள் கிடைக்குது. அதுக்கு போதி தர்மர பத்தி நிறைய டீடெயிலிங் தேவை. கடைசியா ஒரு மாஸ் வில்லன். போதி தர்மரோட சக்தி நிறைஞ்ச சூர்யா. அடிச்சு ஆடுறாங்க. படம் முடியுது.

இது இந்த ஆட்டோக்காரன் மண்டைக்கு தோணின கதை சார். அவங்க எல்லாம் பல கோடி சம்பளம் வாங்குற பெரிய பிஸ்தாங்க. அவங்களால இத விட சூப்பரா திங் பண்ண முடியும். ஆனா செய்ய மாட்டேங்குறாங்க.

கேள்வி: கடைசியா உங்க பஞ்ச்.

பாவம் அந்த சூர்யா தம்பிய வேஸ்ட் பண்ணாதீங்க. அவர விட்டுடுங்க.

ஆனா ஒரு சீன்ல ஸ்ருதியோட பிரெண்டு "ப்த்திரம் டீ....அவன் நமக்கு தேவை" அப்படின்னு சொல்லும் பாருங்க....ஐயோ உலக மகா காமெடி. வாட் எ டி.என்.ஏ ஆராய்ச்சிக்குழு.

நான் தமிழங்கோ நான் தமிழங்கோ. தமிழன் கிட்ட போதி தர்மரோட ஜீன் இருக்கோ இல்லையோ என் கிட்ட ரெண்டு லீ ஜீன்ஸ் இருக்கு ஹீ ஹீ ஹீ...

Monday, May 16, 2011

மூன் பிக்சர்ஸ் வழங்கும் தாத்தா சுட்ட வடை



தாத்தாவுக்கு தொழில் வடை சுடுவது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எப்படியாவது வடை சுடும் கான்ட்ராக்ட் கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் தள்ளாத வயதிலும் பொல்லாப்பை புறம் தள்ளி இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் தமிழ் குடிகள் வடை தின்று களித்தோங்கும் பேரின்பத்திற்காய் தன்னையே வருத்தி தாறுமாறாக உழைப்பவர்.

தாத்தாவை சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. ஒரு மாமா இருந்தார். அங்கிள். அவரது தொழில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி பாடல் போடுவது. அதாங்க புணல் கட்டி பாட்டு போடுறது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் இருபத்திநான்கு மணி நேரமும் யாராவது தொலைபேசியில் அழைத்து பாட்டுப் போட சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அழைத்துப்பேசி அங்கலாய்க்கும் அன்பு உள்ளங்களே நீங்கள் யாருமே அழைக்கவில்லை என்றால் கூம்பு வடிவ முதலாளி என்ன செய்வார். அப்படியே நின்று "யாராவது அழையுங்களேன் யாராவது அழையுங்களேன்" என்று கெஞ்சிக்கொண்டிருக்கவா போகிறார். ஏதாவது ஒரு பாட்டை ஒலிபரப்பத்தானே போகிறார். போடுகிற பாட்டை கேட்டுவிட்டு போகவேண்டியது தானே. அதென்ன எந்நேரமும் போன் போட்டு பாட்டு கேக்குறது?

"ஹெல்லோ நீங்க நல்ல இருக்கீங்களா? ஹெல்லோ நாங்க நல்ல இருக்கோம் நீங்க நல்ல இருக்கீங்களா?"
"லைனே கிடைக்கல. இப்ப தான் கெடச்சது"
வாழ்க வாழ்க என் அருமை போன் போட்டு பாட்டு கேட்கும் போக்கற்ற தமிழர்களே.

ஒரு நாள் தாத்தாவுக்கு ஒவ்வாத பாட்டை கூம்பு வடிவ குண்டுச்சட்டியில் ஒலிபரப்பப்போவதாக தகவல் தாத்தாவுக்கு கிடைத்தது. தாத்தா உடனே அதை கண்டித்தார். ஒலிபரப்பாதே என்று எச்சரித்தார். அங்கிள் அந்த எச்சரிக்கையை எச்சில் போல் துப்பி தூக்கிப் போட்டார். கரைவேட்டியின் எச்சரிக்கை மணியை கார்ப்பரேட் கோட் சூட் நிராகரித்துவிட்டது. பாடலை ஒலிபரப்பினார்.

பல தேசங்களுக்கு எதிராய் போர் தொடுத்து பல வீரர்களை போர் முனையில் வீழ்த்தி தன் நாட்டையும் நாட்டு மக்களையும் அந்நிய நாட்டிடமிருந்து காப்பாற்றிய போர்வாள் புலி அந்த பாடலை கேட்டு சினம் கொண்டது.

ஆத்திரம் அடைந்த அந்த வீரப்புலியின் அடியாட்கள் கூம்பு முதலாளியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். மூன்று பேரை தூக்கிப்போட்டு தீயிட்டு கொளுத்தினார்கள். தமிழகமே திக்குமுக்காடிப்போனது. எந்த தவறும் செய்யாமல் உயிரிழந்த அந்த மூன்று பேருக்காக கண்ணீர் சிந்தியது. அது தான் அப்பாவி தமிழனின் சூதுவாது தெரியாத வெள்ளை மனம். அலறிப்போன கூம்புவடிவ முதலாளி. சம்பவ இடத்திற்கு விரைந்தார். "ஐய்யஹோ என் அலுவலகத்தை உடைத்து ஊழியர்களை எரித்துவிட்டாயே. உன்னை சும்மா விடமாட்டேன் உன்னை சும்மா விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன்" என்று கூம்பு வடிவ ஒலிபெருக்கியிலேயே சூளுரைத்தார்.

கூம்பு முதலாளியின் பொது அறிவு இத்தனை மங்கலாய் இருக்கிறதே என்று அப்போது நான் அங்கலாய்த்தேன். மூன்று பேரை தூக்கிப்போட்டு எரித்தவர்கள்

"இரவிலே சாலையோரத்தில் கேட்பாரற்று படுத்துறங்கும் அனாதைகளா?"
"கூட்டிக்கொண்டு போய் என்கவுண்டரில் போட்டால் கூட கேட்க நாதி இல்லாத எம் குடி தமிழர்களா?"
"ஏதாவது ஒரு பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி பணிய வைக்க பாமரர்களா?"

அல்லவே அல்ல. அவர்கள் அரசியல் குஞ்சுகள். லேசாக உரசினாலே லேட் நைட்டில் வீட்டுக்கு ஆளனுப்பும் லார்டுகள் அவர்கள்? கூம்பு முதலாளியே, தெருவில் திரியும் ஆள் பேரில்லாத லொச்சை பையனென்றால் உடனே வாகனத்தில் ஏற்றி குனிய விட்டு குதறி பத்திரிகைக்கு பேட்டி கொடுத்து மாலை மலரில் கட்டம் கட்டி உள்ளே தள்ளி சட்டத்தின் முன் நிறுத்தி மேதமை பொருந்திய இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம்.

ஆனால் அலுவலகத்தை எரித்தவர்களோ சட்டத்தையே சட்டையாக போட்டுக்கொள்பவர்கள்.

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா...இது போன்ற அரசியல் குஞ்சுகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு நிறைய சிறுவர் சிறுமியர் நீதிமன்றத்திற்கு வருவார்கள் ? அவர்கள் எதற்காக வருகிறார்கள் தெரியுமா? சர்க்கஸ் பார்ப்பதற்காக. அந்த வீரதீர குஞ்சுகளுக்கு ஆதரவாக வரிசையில் வந்து சாட்சிகள் அடிக்கும் பல்டி சாகசங்களை சர்க்கஸை விட மேலான உற்சாகத்தோடு கை தட்டி விசிலடித்து வரவேற்கவே அந்த பிள்ளைகள் நீதிமன்றத்திற்கு முன் கூடுவார்கள்.

இந்த ரீதியில் தான் அ.கு.களின் வழக்குகள் நடைபெறுகின்றன. இந்த லட்சணத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று கூம்பு முதலாளி சூளுரைத்தபோது வடிவேலு அவர்கள் "நாய் சேகர்! நாய் சேகர்!! நாய் சேகர்!!!" என்று மூன்று முறை கர்ச்சித்ததை போலிருந்தது.

எனினும் மக்கள் முதலாளியின் அணியில் தான் இருந்தார்கள். அலுவலகத்தை எரித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. எங்கள் தமிழ் தாய்மார்களில் பலருக்கு டீ கிளாஸ் கழுவும் பிள்ளை இருக்கிறான்...செக்யூரிட்டி வேலைக்கு போகும் கணவர் இருக்கிறார்... சுண்டல் விற்கும் சிறுவன் இருக்கிறான்....இப்படி தன் இரத்தத்தில் ஒருவர் தான் எரித்துக்கொல்லப்பட்ட மூன்று பேர் என்ற உணர்வு. அது தான் அவர்களை வெகுளித்தனமாய் அலுவலகத்தை எரித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று நினைக்க வைத்திருக்கிறது.

பிறகு என்ன நடந்தது. வழக்கு தொடுக்கப்பட்டது. கூம்பு வடிவ குழாய் ஒன்றை அறிவுக்கோயிலிலிருந்து கழற்றி வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஒலிபெருக்கிகளில் தாத்தாவை ஓரங்கட்டினார்கள். கேப்டனுக்கும் இடம் கொடுத்தார்கள். அம்மாவை பற்றி செய்திகள் வந்தன. ஒரு முதலாளியாய் தன் அலுவலகம் எரிக்கப்பட்டதற்கும் தன் ஊழியன் தாக்கப்பட்டதற்கும் தக்க பதிலடி கொடுத்துவிட்டார் என்று மக்கள் மகிழ்ந்தார்கள். கூம்பு வடிவ குழாய் இனி மேல் நடுநிலையோடு செயல்படும் என்று அறிக்கை விட்டார் முதலாளி. மகிழ்ந்தோம். தமிழகத்தில் கட்சி சார்பில்லாத ஒரு ஒலிபெருக்கையா என்று வியந்தோம். வரவேற்றோம்.

தாத்தா கட்சியில் யாருக்காவது சளி பிடித்தால் கூட ஒலிபெருக்கி வந்த கூம்பு இப்போது வேம்பு என்றான போது தாத்தா நோன்பிருந்து சிந்தித்தார். புதிதாக தானும் ஒரு ஒலிபெருக்கி தொடங்க தீர்மானித்தார். அதில் சிரிப்பொலியும் கேட்கவேண்டும் இசையும் அருவியாய் கொட்ட வேண்டும். செய்திகள் வரவேண்டும் மானும் மயிலும் ஆடவேண்டும் என்று தீர்மானித்து புதிய ஒலிபெருக்கியை துவக்கினார். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பல இடங்களில் விளைவை சந்தித்தது. அதிகார வர்க்கத்தை பகைத்துக்கொண்டால் என்னென்ன நடக்கும் என்று கண் முன்னே கண்டது.

கூம்புக்கு மொத்தமாக ஆப்பு வைக்க அரசே கேபிள் விற்க தயாரானது. அரசியல் குஞ்சுகளை பகைத்துக்கொண்டால் தன் அன்டர்வேரே கழன்டுவிடும் என்ற ஜனநாயக உண்மையை உணர்ந்த கூம்பு வடிவ முதலாளி சமரசத்திற்கு தயாரானார். ஒரு நாள் இதயம் கனிந்து கண்கள் பனித்து ஒரு குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்த குடும்ப புகைப்படத்தில் அலுவலகத்தில் எரிந்து போன மூன்று பேரை தேடித்தேடி களைத்து போனது தமிழ் சமூகம். கூட்டு சேர்ந்த பிறகும் கூட தங்கள் ஒலிபெருக்கி நடுநிலையோடு தான் செயல்படும் என்று பேட்டி கொடுத்தார் முதலாளி.

தமிழ்நாட்டில் நடுநிலையோடு ஒரு ஒலிபெருக்கியா என்று வியந்து போனர் தமிழர்.

அந்தோ பரிதாபம்!! முதலாளியின் நடுநிலை முட்டு சந்து வரை நாறியது .

ஜனநாயக மேடையில் தொப்புள் தெரிய கவர்ச்சி நடனமாடி ஆள் சேர்க்கும் கலையில் வித்தகரான 'புயல்' வீசிய இடத்தையெல்லாம் தனி ஷோவாக ஒலிபரப்பியது கூம்பு. கூடவே கேப்டனை கப்பலில் கட்டி வைத்து அடிக்காத குறையாக அடித்தது. நடுநிலையாம் நடுநிலை.

அம்மா பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டதை கவனமாக கேமராவில் பதிவு செய்து 'அம்மாவின் அரக்க குணம்' என்று அதிரடியாக செய்தி ஒலிபரப்பவும் தவறவில்லை நடுநிலை காத்த கூம்பு.

அதே போல் பல வருடங்களாக உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் வழக்கு ஏதாவது தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தால் கூட அதையே தலைப்பு செய்தியாக்கி பூதாகர வடிவம் கொடுத்து நடுநிலை தர்பார் நடத்தியது.

அம்மா தோல்வி என்று கருத்து கந்தசாமி யாராவது கருத்துக்கணிப்பில் சொன்னால் கூட தலைப்பு செய்தியானது நடுநிலை கூம்பில்.

இப்படி நடுநிலையோடு செயல்பட்ட கூம்பின் காமெடி ஆட்டத்தை அன்று காண முடிந்தது.

அன்று யாருக்கு வடை கான்ட்ராக்ட் கிடைக்கப்போகிறது என்ற முடிவுகள் அறிவிக்கும் நாள். காலையிலேயே கூம்புக்கு அரசியல் அறிஞர்கள் ஆஜரானார்கள். நடுநிலையாம் நடுநிலை. வந்தவர் மீசைக்கார நண்பர். வீரப்பனை போன்ற விருமாண்டி
என்ன சொன்னார் என்றால்

"அதாவது தாத்தா கடந்த ஐந்து வருடத்தில் நிறைய வடை சுட்டு இலவசம் இலவசமாக எல்லோருக்கும் வாரி வழங்கினாராம். அதனால் அதை வாங்கித்தின்ற எம் குடி தமிழச்சிகள் குலவி சத்தத்தோடு திரண்டு வந்து வாக்களித்ததன் விளைவு தான் அதிக வாக்கு சதவீதமாம். அதனால் இப்படி அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதே தாத்தாவுக்கு வெற்றி என்றார்.


அடுத்த அரை மணி நேரத்தில் தாத்தாவின் தோல்வி உறுதியானது. உடனே விருமாண்டியை கூம்பில் காணவில்லை. கூம்பு முதலாளியின் முதலாளித்துவம் அதன் பிறகு தான் வெளிப்பட்டது.

- அம்மாவின் அங்க அசைவுகள் என ஒவ்வொன்றையும் பதிவு செய்தது.
- துறை ரீதியான மந்திரி சபை பட்டியலை வெளியிட்டது.
- அம்மா அம்மா என்று போற்றி புகழாரம் சூட்டியது.
- பதிவியேற்பு விழாவை பொதிகையிடம் கடன் வாங்கி ஒலிபரப்பியது .

இந்த செயலை உண்ட வீட்டுக்கு விசுவாசம் என்பதா? இல்லை நடுநிலை என்பதா? இல்லை பாத்திரம் ஏந்தி பப்ளிக்காக எடுக்கும் பிச்சை என்பதா?

இப்படி அம்மாவிடம் மொத்தமாக மண்டியிட்டு மடிந்திருப்பது நடுநிலை அல்ல நாராச நிலை என்றே தோன்றுகிறது.தீர்க்க சுமங்கிலி பவஹ

ஆனால் தாத்தா வழக்கம் போல சந்தர்ப்பவாத முதலாளிகளையும் பேராசை பிடித்த தன் சொந்தங்களையும் காப்பாற்றுவது தான் 'வடை சுடும் நிறுவனத்தை' காப்பாற்றுவதென்று தன் வடை தின்னும் தொண்டனுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவுறுத்தி வருகிறார்.

Sunday, May 8, 2011

சுகத்த விக்கிற பொண்ணு.




சமீப காலமாய் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த" என்றொரு பாடலை ஒரு அம்மையார் அடிக்கடி டி.வி.யில் வந்து பாடுகிறார். சுண்டி இழுக்கும் அந்த குரலும் பாடலின் இடையிடையே வரும் பீஜியமும் மனதை ஈர்க்கிறது. "தலை நிறைய கனகாம்பரம் துட்டிருந்தா ஒதுக்குப்புறம்" என்ற ரீதியில் மங்கிய இருட்டில் பெண்கள் ஆடுவது கூடுதல் சிறப்பு. ஒய்யாரமான மெட்டில் குளிர்ச்சியான கடற்கரை காற்றோடு கலந்து சோகத்தை ஒரு வித எள்ளலோடு, குழந்தைக்கு கதை சொல்லும் தொனியில் வரும் அந்த பாடல் தெம்மாங்கோடு கலந்த மைல்டான கும்மாங்குத்து.

ஒரு ஜன்னலோர ரயில் அனுபவத்தை போல் சீராக சென்றுகொண்டிருக்கும் பாடல் "சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா" என்று அம்மையார் கெஞ்சுகிறபோது தடாலென தடம் புரண்டு குப்புற படுத்து குபீராகிறது.

பாடலின் இறுதியில் இந்த வரிகளை கேட்ட பிறகோ என்னமோ படத்தில் ஒருவர் 'குவேய்' என்று வாந்தி எடுக்கிறார்.

வரிக்குவரி "நான் இப்படிதான்யா" என்று தன் இருப்பை கம்பீரமாய் வெளிப்படுத்தும் அந்த அம்மையார் இறுதியில் "சு.வி.பொ.ம.இ.பா" (அம்மா... தாயே...) என்று கெஞ்சும் போது தன் கம்பீரத்தையும் தன் மீது தனக்கிருக்கும் அடிப்படை அகங்காரத்தையும் இழந்து நிர்மூலமாய் தெரிகிறார். தன் உடலை ஒரு பிச்சைப்பாத்திரம் போல் வளைத்து "அய்யா பிச்சை போடுங்கய்யா" என்று பிச்சை எடுப்பதற்கு சமமான ஒரு அவமானம் தான் அந்த வரிகள்.

சுகத்தை விற்கும் பெண்ணிடம் எதற்காக மனதை பார்க்கவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மனதை பார்த்துவிட்டு வரவா நாம் அங்கு போகிறோம். சுகத்தை விற்கும் பெண்ணிடம் சுகத்தை மட்டுமே பார்ப்பது வியாபார மனப்பான்மை என்று சிலர் பொங்கக்கூடும். ஆனால் நீ எப்போது சுகத்துக்கு பணம் கொடுக்க துணிந்தும் அவள் சுகத்துக்கு பணம் வாங்க துணிந்தும் விட்டாளோ அப்போதே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிறகு எதற்கு மனதை பார் மாங்கல்யத்தை பார் என்ற வீணான சென்டிமென்ட் கோஷம் என்று தான் எனக்கு புரியவில்லை.

ஒருவர் சிக்கன் வாங்க கடைக்கு போய்விட்டு "அய்யோ சிக்கனே ...உன்னை கொல்கிறார்களே ......உயிரை கொடுக்கும் சிக்கனுக்கும் மனசிருக்குது பாரய்யா " என்று உச்சு கொட்டிவிட்டு "நல்ல லெக் பீஸா போடுப்பா" என்று வாங்கி கேட்டு கடித்து துப்பும் கிராதகனாக தமிழன் இருப்பது வேதனை அளிக்கிறது. Double Standards.

"சுகத்த விக்கிற பொண்ணுக்கு மனசிருக்குது பாரய்யா" என்ற படு கேவலமான வரியை எழுதியவர் நிச்சயம் பச்சைத் தமிழராகத்தான் இருக்கவேண்டும். காரணம் தமிழனுக்கு மட்டும் தான் எவரையும் பரிதாபமாய் பார்க்கும் பழக்கமுண்டு.


மேலும் ஒரு பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்க்கவேண்டிய அவசியம் என்ன? உலகில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு நாட்டிலும் விபசாரியை பரிதாபமாக பார்க்கும் பழக்கம் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஒரு தனி மனிதன் உணவுக்காகவும் உடைக்காகவும் தன் இன்னபிற சுக போகங்களுக்காகவும் தன் உடலை விற்பதற்கு அவனுக்கு முழு உரிமை இருக்கவேண்டும். என் உடல் மேல் எனக்கே உரிமை இல்லை என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை. தனிமனித உரிமை என்பதே இது தான்.

பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்த்தே தீருவேன் என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால் இரக்கப்படலாம். யார் என்றால் அவளோடு வியாபார ஒப்பந்தம் செய்யாத ஒருவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். அவளுக்கு பணம் கொடுத்தும் அவளை தொடாமல் அவளோடு அன்பாக ஆதரவாக உரையாடிவிட்டு முற்றும் துறந்த முடியாத முனிவராய் வருபவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். பணமும் கொடுத்து சுகமும் அனுபவித்துவிட்டு பிறகு அவளை இரக்கத்தோடு பார்க்கவேண்டும் என்பது அவள் மீது சிறுநீர் கழிப்பதற்கு ஒப்பான செயல் அல்லவா?.

ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளுவது எத்தனை கொடூரமானதோ அதே போலத்தான் ஒரு பெண் தன் உடலை விற்று பிழைக்கிறாள் என்பதற்காக அவள் மீது பரிதாபப்படுவதும். அவளை வேறாக பார்ப்பதும், அவளை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதும் "அவளுக்கும் மனசிருக்கு பாரய்யா பாரய்யா" என்று பச்சாதாபப்பட்டு அவளை எப்போதும் இரண்டாம் நிலை குடிகளாகவே சித்தரித்து மகிழ்வதும் அதே போன்றதொரு வக்கிரம் தான்.

ஒரு விபச்சாரி மீது பரிதாபப்படும் எவனும் அவளை அவமதிக்கிறான். அவளை வேறாக பார்க்கிறான். தனக்கு சமமாக அவளை கருத அவன் விரும்பவில்லை என்பது தான் பொருள்.

சரி அது போகட்டும்....தமிழ்நாட்டில் அரசியல் செய்யத்தெரியாத அப்பாவிகள் வாழும் ஊர் எது என்று கேட்டால் அது தூத்துக்குடி தான். அதுவும் தூத்துக்குடி பெண்கள் அரசியலில் பிழைக்கத்தெரியாத அப்பாவிகள் என்றே சொல்லவேண்டும். ஷகீலா போஸ்டருக்கு சாணி அடிக்கும் ஷார்ப்பான புரட்சிப் பெண்கள் உலா வரும் இத்திருநாட்டில் தூத்துக்குடி பெண்களிடம் புரட்சி குறைவோ என்றே தோன்றுகிறது.
பின்னே என்ன?

ஒரு அம்மையார் தைரியமாக டி.வி.யில் தோன்றி "நான் தூத்துக்குடி பெண் என்கிறார் சுகத்தை விற்கும் பெண் என்கிறார் உங்களுக்கெல்லாம் இரத்தம் கொதிக்கவில்லையா? "

"தூத்துக்குடி பெண்கள் எல்லாம் சுகத்தை விற்கும் பெண்களா?" என்று பொங்கி எழுந்து ஈசன் படத்தை ஈயடிக்க விட்டிருக்க வேண்டாமா?

மாலை மலரில் கூளிங் கிளாஸ் அணிந்தபடி பேட்டி கொடுக்கும் புனித வாய்ப்பை தூத்துக்குடி மாதர் குல மேன்மக்கள் இழந்துவிட்டது வருத்தத்திற்குரியது.

ஒரு வேளை அந்த பாடலை ஒரு ஆண் பாடியிருந்தால் தூத்துக்குடி பெண்களுக்கு தூக்கிவாரி போட்டிருக்குமோ என்னவோ?

சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு பாடல் வானம் திரைப்படத்தில் வரும் "எவன்டீ உன்ன பெத்தான்". சரி அப்படி அந்த பாடலில் என்ன தான் இருக்கிறதென்று ஒருமுறை கேட்டு பார்த்தேன். சகிக்க முடியவில்லை. சிம்பு பாடுகிற போது பத்து யமகா பைக்குகள் ரேசுக்கு நிற்பது போல ஒரே இரைச்சல்.

எவன்டீ உன்ன பெத்தான்....கையில கெடச்சான் செத்தான். அடடா என்ன ஒரு கவித்துவம். இந்த பாட்டையும் டி.ஆரின் புகைப்படத்தையும் அருகருகே வைத்து தரிசித்தால் பாடல் சிம்புவின் தங்கையை மனதில் வைத்து எழுதியதாகவே தோன்றுகிறது.

இதன் தொடர்ச்சியாக

"உன்ன ஆத்தா தான் பெத்தாளா?
இல்ல ஆளு வச்சு பெத்தாளா?"

என்கிற ரீதியில் விரைவில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிம்புவின் தயாரிப்பில் வெளியாகக்கூடும்.

பாடலுக்கு வரி கிடைக்காமல் சிம்பு ரொம்பவே திண்டாடியிருக்கிறார். முதல் சரணத்தில் "என் லேப்டாப் நீ தான் என் செல் போன் பேட்டரி நீ தான் என் ஜீன்ஸ் பேன்ட் ஜிப்பு நீ தான் என் அக்குள் கப்பு நீ தான்" என்கிற ரீதியில் அனைத்து எலக்ட்ரானிக் ஐட்டங்களையும் தன் காதலியாக உருவகித்து மகிழ்கிறார். இரண்டாவது சரணத்தில் காதலியின் "பேஸ் கிரீம் நான் தான் பவுடர் நான் தான் டவல் நான் தான் பேஸ்ட் பிரஷ் நான் தான் " என்று சகல பாத்ரூம் வஸ்துகளையும் சொல்லி கிளுகிளுப்பேற்றுகிறார். இதில் காமெடி என்னவென்றால் காதலன் எப்போதும் ஐபேட் ஐபாட்டோடு சுற்றுகிறார். காதலி பாத்ரூமில் பல் விளக்கி மாங்கு மாங்கென்று எந்நேரமும் குளித்துக்கொண்டே இருப்பாராம்.

இந்த பாட்டிலே தன் மாதர் குல போராளிகளுக்கும் ஒரு வேலை வைத்திருக்கிறார். அதாவது காதலியின் மானம் காக்கும் மேலாடை காதலனாம். மேலாடையை விட பெரும்பாலான சமயங்களில் உள்ளாடைகள் தான் நம் மானத்தை காப்பாற்றி வந்திருக்கிறதென்பது உலக மரபு. ஆனால் கவிஞர் இங்கே உலக மரபை உடைத்தெறிந்து புதிய கண்டுபிடிப்பாக மானம் காக்கும் மேலாடையாக காதலனை உருவகப்படுத்தியிருக்கிறார். அப்படியானால் உள்ளாடை அணியாமல் மேலாடை மட்டும் அணிந்துகொள்ளும் பெண்கள் மானம் உள்ளவர்களா? என்கிற கேள்வி உதயமாகும் புள்ளியில் மாதர் சங்கங்கள் விழித்துக்கொண்டு போர் கொடி உயர்த்தியிருக்கின்றன.

எவன்டீ உன்ன பெத்தான் என்ற வரிகளை ஒரு துள்ளலான மனநிலையோடு அணுகினால் தூக்கலாகத்தன் இருக்கிறது இருந்தாலும் சகிக்கல.



குட்டி சூப்பர் ஸ்டாரின் தந்தை அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதாவது சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்டார்களாம். உடனே இவர் கேட்கிறார் "ஏன் அந்த படத்தோட டயரக்டர வசனகர்த்தாவ புரொடியூசர விட்டுட்டு சிம்புவ மட்டும் தாக்குறீங்க?". இதே படம் நல்லா ஓடி பூ மாலை போட்டிருந்தா இவரு சொல்வாரா? "ஏன் சிம்புவுக்கு பூ மால போடுறீங்க போய் இந்த படத்தோட வசனகர்த்தாவுக்கு போடுங்க இயக்குனருக்கு போடுங்க கேமராமேனுக்கு போடுங்கன்னு".

நல்ல காமெடி படம் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. டி.ஆர். கமான். மும்தாஜ் ரெடி. அடுத்த படம் எப்போ?

வருங்காலத்தில் தனுஷின் படங்களை ஜூனியர் தனுஷ் ரீமேக்கினால் சிரமமே இல்லாமல் பஞ்ச் டயலாக் எழுதிவிடலாம்.

ஆடுகளம்.

தனுஷ் - நான் எல்லாம் சுனாமியிலயே ஸ்விம்மங்ங போடுறவன்.

ஜூனியர் தனுஷ் - நான் ஸ்விம் பண்ணினாலே அது சுனாமிடா!!!!சுனாமிடா!!!!சுனாமிடா!!!!

மாப்பிள்ளை.

தனுஷ் - நான் பாயிசன் கிடச்சாலே பாயாசம் மாதிரி குடிப்பேன்.

ஜூனியர் தனுஷ் - நான் பாயாசம் குடிச்சாலே பாய்சனா மாறிடும் அப்போ பெனாயில் குடிச்சா?.

ஜூனியர் சிம்புவுக்கு சிரமமே இல்லை.

எந்த நாதாரி உன்ன பெத்தான்.
மண்-லாரி ஏத்தினா செத்தான்...செத்தான்...செத்தான்....
 
Top Tamil Blogs by Tamilers