Tuesday, October 19, 2010

முதலாளிகள் ஒழிக.

வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய வீட்டில் எச்சில் பாத்திரம் கழுவுவதை விட அலுவலகங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை அவர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கே அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.

வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதென்பது எனக்கு கடுகளவும் பிடிக்காத ஒன்று. முடிந்தவரை என் துணிகளை நானே துவைத்துக்கொள்வேன் அல்லது எந்திரத்திடம் சமர்ப்பித்துவிடுவேன். பெரும்பாலானவர்களுக்கு வீட்டு வேலைக்காரிகள் மேல் அதிர்ப்தியே மிஞ்சுகிறது. காரணம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதில் தொடங்கி சம்பளம் கடன் வாங்குவது வேலைகளில் பொறுப்பின்மை நம்பகத்தன்மை குறைபாடு என்று ஏராளம்.

என் நண்பர் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்தாள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வாள். வேலையும் ஒழுங்காக செய்வதில்லை. மேலும் சம்பளம் குறித்து அடிக்கடி சண்டை போட்டும் வந்தாள். நண்பரும் மனைவியும் வேலைக்கு போவதால் வேலைக்காரியை நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் ஏதோ ஒரு அல்ப சண்டை பெரிதாகி வாய்ச்சவடாலில் முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நண்பருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வேலைக்கார அம்மையாரின் கணவர் ஏதோ இயக்கத்தில் இருக்கிறார் போலும். தன் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாய் என் நண்பன் மீது பொய் புகார் கொடுத்துவிட்டார்கள். புகார் குறித்து நடைப்பெற்ற கட்டப்பஞ்சாயத்தில் இருபதாயிரம் வரை பேரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறைய சம்பவங்கள். ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள் என்று நாம் கருதும் மேன்மைபொருந்தியவர்களின் அதிகாரம் இப்படி ஓங்குகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு ஆள் வைப்பதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.

அதே நேரம் அப்பாவியாய் பிழிய பிழிய வேலை வாங்கப்படும் வேலைக்காரிகள் சில சமயம் முதலாளியின் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகி வதை படும் அவலமும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது.

வீட்டு வேலை செய்பவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினராய் இருப்பவரை வேலைக்கு அமர்த்தும் போது சங்கத்து விதிகளை மதித்தாக வேண்டும். இல்லையென்றால் என் சங்கத்து ஆளை அடித்தது யார் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் நேர்மையாக உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்களை நான் அறிவேன். என் வீட்டுக்கு பால் போடும் அம்மாவின் மகன் என்ஜினியரிங் படிக்கிறான். அவர்கள் யார் மீதும் பொய் புகார் கொடுத்து ஏமாற்றி பணம் கரந்து தன் மகனை படிக்க வைக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பி தன் அடுத்த தலைமுறையை ஒரு படி மேலே உயர்த்திவிடவேண்டும் என்ற ஒரே முனைப்போடு உழைத்திருக்கிறாள்.சாதித்திருக்கிறாள்.

முன்பெல்லாம் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கு சென்றுவிடுவதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. படிப்புக்கேற்ப ஊதியமும் பதவியும் உயர்த்தி தரப்படுகிறது. ஞாயமான சம்பளம் பாதகமற்ற ஓர்க் கல்சர் என்று பெண்கள் பலரும் இவ்வேலைக்கு வருகிறார்கள்.

சிலர் எழுதக்கூடும் "பெண்கள் சுதந்திரமாக முதலாளி அம்மாவின் ஆடைகளை துவைத்து காற்றோட்டமாக அக்கம்பக்கத்து வீட்டு கதைகள் பேசியபடி கொடியில் உலர்த்தி மகிழ்வதும் முதலாளியின் கழிப்பறையை இனிமையான திரையிசை பாடலை இசைத்தபடி கழுவிவிட்டுக்கொண்டும் திரிந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள் இன்று கண்ணாடி கட்டடங்களுக்குள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இரண்டு கையில் டிரேயை தூக்கிக்கொண்டு போகிற போது அமெரிக்க ஏகாதிபத்திய விலங்கு அவர்கள் கைகளை பிணைத்திருக்கிறது. ".

அடுத்து வீட்டுவேலைக்காரிகள் பற்றிய இலக்கியம் வரும். அதிலே அந்த காலத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாகவும் சொர்க்கமாகவும் பூந்தோட்டமாகவும் இருந்ததாக எழுதி இப்போது கண்ணாடி கட்டிடங்களுக்கு அவர்கள் சுருண்டுவிட்டதாக அழகிய தமிழில் பிழிய பிழிய வடிக்கப்பட்டு வெளிவரும். நிறைய கற்பனைகள் கொடுக்கும் கரு இது. யாரேனும் தொடங்கலாம்.

அமெரிக்க தொழிற்சாலைகள் வரக்கூடாது புதிய தொழில்கூடங்கள் தமிழ்நாட்டில் துவங்கக்கூடாது ஐ.டி. கம்பெனிகளால் விலைவாசி ஏறுகிறது அதனால் எல்லா ஐ.டி. கம்பெனியையும் இழுத்து மூடு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவனுக்கு சொந்தமாக கார் இருக்கிறதா உடனடியாக கார் தொழிற்சாலைக்கு சீல் வை என்று ஒவ்வொருவரும் தொழிற்புரட்சிக்கு எதிராக கிளம்புவார்களானால் வேலைக்காரிகள் இன்னும் பணக்காரர்களின் உள்ளாடையை துவைக்கும் கௌரவமான இந்திய முதலீட்டில் இயங்கும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டிவரும்.

ஒருவர் என்னிடம் சொன்னார். வெறும் ஆறாயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு அந்நிய நாட்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்களாம். அதன் முதலாளி நம்மை பார்த்து "ஆறாயிரம் ரூபாய்க்கு கூட வக்கில்லாம தானே என் கிட்ட வேலைக்கு வந்த?" என்று கேட்டால் நாம் எங்கே கொண்டு போய் நம் இந்திய திருமுகத்தை வைத்துக்கொள்வோம். எல்லோருக்கும் இந்திய அரசாங்கம் வேலையோ அல்லது அலவன்சோ கொடுக்க முடியுமா?

தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டிய நாம் சில சமயம் முதலாளிகளே இருக்கக்கூடாதென்றல்லவா போராடுகிறோம். போபால் விஷவாயு விபத்தில் மிக குறைந்த தண்டனை அதுவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது குறித்து எரிச்சலடைகிறோம். முதலாளிகள் லாபத்தை மட்டுமே தங்களுக்கு வரவாய் வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மேல் கருணை காட்டவில்லை என்று கோபப்படுகிறோம். இனி மேல் முதலாளியே இருக்கக்கூடாதென்று போர்க்கொடி தூக்குகிறோம். அடப்பாவமே. உலகிலேயே மட்டமான சேப்டி ஸ்டாண்டர்ட்ஸோடு இயங்கும் ஒரு மாபெரும் திறந்தவெளி தொழிற்சாலை - இந்திய ரயில்வேஸ். எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள். சொல்லுங்கள். எத்தனை மந்திரிகள் பதவி விலகினார்கள். எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். விபத்து, விபத்து தானே என்று இழப்பீடு வழங்கியதும் பிழைப்பை பார்த்துக்கொண்டு போய்விடுகிறோமே ஏன்? அது பொதுத்துறை. உங்களின் ஆசையும் எல்லாம் பொதுத்துறை ஆகிவிடவேண்டும் என்பது தானே. பிறகு ரயில்வே கக்கூஸ் போல் இந்த தேசமே நாற்றமடிக்குமே பறவாயில்லையா?

போபால் விஷவாயு கசிவு ஒரு விபத்து. ஒரு விபத்துக்கு என்ன காரணமாக இருக்க முடியும். அறியாமையினாலோ அஜாக்கிரதையாலோ தான் விபத்து நேரிடும். அதற்கான தண்டனை வழங்கிவிட்டது நீதிமன்றம். ஆனால் அரசாங்கம் அந்நிறுவனத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்கும் முன்பே விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசித்து அதிக இழப்பீடு வழங்கினால் தான் இந்தியாவில் தொழில் செய்ய முடியும் என்று அக்ரிமென்ட் போட்டிருப்பார்களேயானால் ஞாயமான இழப்பீடுத் தொகை பெற்றிருக்க முடியும். மற்றபடி முதலாளியை தூக்கில் போடு ஓபாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரி என்பதெல்லாம் சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாது.

சட்டத்தையே மாற்றவேண்டும் என்பீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு வேளை நாளை காரில் சென்றுகொண்டிருக்கும்போது எவனாவது வேண்டுமென்றே குறுக்கே விழுந்து இறந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூக்கில் போடுவார்கள். ஞாயம் நீதி நேர்மை வென்றுவிடும்? சமத்துவம் நிலைநாட்டப்படும். சர்வாதிகார சட்டத்தில் தான் அதற்கு சாத்தியமிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரிய உண்மை.

இன்று ஐ.டி. துறை பெரிய புரட்சி என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். நாம் இங்கே செய்வது என்ன? அமெரிக்காகாரன் தின்ற தட்டை மலிவு விலையில் கழுவி வைக்கிறோம்.

இதை கேள்விப்பட்டவுடன் அவர்கள் "இது என்ன மேட்டிமை அதிகார வர்க்கத்தின் கொடுங்கனவு. அமெரிக்கர்கள் தின்ற தட்டை நாம் மலிவு விலையில் கழுவுவதா? உடனடியாக எல்லா ஐ.டி. கம்பெனி மீதும் கல்லெறிந்து அமெரிக்க நிறுவனங்களை அடித்து நொறுக்குவோம் வாரீர் " என்று போராடக்கூடும். அப்படி போராட முன்வரும் போராளியே இந்தியாவில் கழுவ தட்டே இல்லையே அதை பற்றி என்றேனும் யோசித்தாயா நண்பா?

நாம் அயல் நாட்டுக்கு நம் தட்டுகளை அனுப்பவேண்டாம். குறைந்தபட்சம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் அளவிற்கு இந்தியாவில் கழுவ தட்டுகள் இருக்கிறதா?

வீடு கட்டுகிறானே அவனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?
நெசவு செய்பவனுக்கு உடுத்த துணி இருக்கிறதா நோய்களை குணமாக்கும் டாக்டருக்கு நோயே இல்லையே போன்ற சித்தாந்தங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் அடிமைத்தனமும் இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் குறைந்துவிட்டது.

இந்தியாவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்தால் சராசரியான லாபம் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முதலாளிகள் கொளுக்கிறார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? முதலாளிகள் மேல் அல்ல. ரயில்வே டாய்லெட் நாற்றமடிக்க யார் காரணமோ அவர்களே தான் முதலாளிகள் கொளுக்கவும் காரணம்.

அம்பானி வீடு கட்டினால் அவருக்கு எதிராக துப்புவதை விட அவர் வீடு கட்டும் அளவுக்கு பணம் எப்படி சம்பாதித்தார்?நேர்மையாக சம்பாதித்தாரா? குறுக்கு வழியில் சம்பாதிக்கவிட்டது யார்? இனி மேல் இப்படி ஒரு குறுக்கு வழி அம்பாசமுத்திர அம்பானி வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?காங்கிரஸ் அரசு கவிழ வேண்டுமா? அடபோயா.

முதலாளிகளை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பதும் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் "முதலாளிகளுக்கு சொம்பு தூக்கும் மன்மோகன் ஆட்சியில் தான் இந்த அவலம்" என்று வெறும் மனிதர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நம் இந்திய ஜனநாயகத்தில் சட்டத்தில் நடைமுறையில் Frameworkல் எங்கே கோட்டை விடுகிறோம் என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய யாரேனும் போராடுவார்களேயானால் நான் முதல் ஆளாக நின்று அகிம்சை வழியில் கொடி பிடிக்க தயார்.

உண்மையில் வறுமையையும் பிணியும் போக தொழில் முன்னேற்றம் அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அது பெருமளவு களைந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். முதலாளிகளின் சுரண்டலை தடுப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் நம் போராட்டம் ஒளியேற்றும் மெழுகு. இல்லையேல் அதுவே சிதை மூட்டும் கொள்ளி.

DISC: இந்த கட்டுரையை படித்து டென்ஷனாகி யாரும் எதிர்வினை ஆற்றி புறப்படவேண்டாம். நீங்கள் எழுதப்போகும் எதிர்வினையை விட அசாத்தியமாக இக்கட்டுரைக்கு என்னால் எதிர்வினை ஆற்ற முடியும். வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

அறிமுகங்கள்


பூமி வெப்பமாதல் குறித்து காவேரி கணேசின் பக்கங்கள்


வருடங்களுக்கு கூட தமிழில் பெயர் இருக்கிறது தெரியுமா?


தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும்....

களவாணித்தனமாய் கல்வி விற்போம்/வாங்குவோம் வாருங்கள்.

எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும் - கடிக்க முறுமுறுக்க.

கடவுளெனும் தொழிலாளி - சீரியஸ் போலீஸ்.

10 comments:

Anonymous said...

ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்க வீட்டு பிள்ளைகள் தினமும் பள்ளிப்பேருந்தில் பயணிக்கிறார்கள். ஒருநாள் பேருந்தின் உள்ளே பெரிய ஓட்டையை பார்க்கிறீர்கள். மனம் பதைத்து பேருந்து ஓட்டுனரிடம் அந்த ஓட்டையை அடைக்கச் சொல்கிறீர்கள். ஆனால் மறுநாளும் அதே ஓட்டையுடன் தான் பேருந்து வருகிறது. இப்போது பள்ளி நிர்வாகத்துக்கு உங்கள் கவலையை தெரிவித்து பேருந்தின் ஓட்டையை அடைக்கச்சொல்கிறீர்கள். ஆனால் மறுநாளும் அதே ஓட்டையுடன் பேருந்து வருகிறது. இப்போது அந்த ஓட்டையினால் ஏதாவது விபத்து நேர்ந்தால், மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுனருக்கு 2 ஆண்டுகள் தண்டனையும் 2000 அபராதமும், பள்ளி நிர்வாகத்துக்கு கண்டனம் மட்டும் செய்தால் உங்களது ரியாக்சன் என்னவா இருக்கும்?. விபத்துங்கறது தெரியாம நடக்கறதுன்னு விட்டுடுவிங்களா, இல்லை அலட்சியத்துனால நடந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பு ஏற்கனும்னு சொல்வீங்களா?. போபால் பத்தி கட்டுரைல எழுதும் முன் அதைப்பத்தி கொஞ்சமாவது தெரிந்து எழுதுங்கள்.

rockzsrajesh said...

உண்மைய சொள்ளன்னும்ன ரொம்ப அழமான கருத்துகள சொல்லி இருக்கீங்க விசா . எப்பவும் எல்லா விஷயதுளையும் தப்பு சரி அப்படின்னு ரெண்டு இருக்கும் , ஏதோ ஒன்ன மட்டும் பாத்துட்டு எல்லாமே தப்புனோ , இல்ல எல்லாமே சரினோ சொல்லுற மனோபாவம்தான் பெரும்பளிடதுளையும் இருக்கு , அப்படி இல்லாம ரெண்டையும் சரி சமமா அலசி இருக்கீங்க , நெறைய எடத்துல என்னோட எண்ணங்களுக்கும் , கருத்துக்களுக்கும் ஒத்து போகுது நீங்க இந்த பதிவுல சொல்லி இருக்குறது , ஒரு பக்குவபட்ட பதிவு , வாழ்த்துக்கள் ,

அன்புடன்
ராக்ஸ் ....


http://rockzsrajesh.blogspot.com/

VISA said...

அன்பின் அனானி அறியாமையால் நடைபெறும் விபத்துக்கும் அலட்சியத்தால் நடைபெறும் விபத்திற்கும் தண்டனைகள் வேறுபடும். நாம் செய்யவேண்டியதெல்லாம் கோர்ட் கூண்டில் குண்டுகட்டாக நின்றுகொண்டு அலட்சியத்தால் தான் விபத்து நடந்ததென்பதை நிரூபிக்கவேண்டும். ஓட்டையை முன்னரே கண்டு சொன்னபோதும் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததென்பதை நிரூரூரூரூரூரூபிக்கவேண்டும். காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் நீதி வழங்கப்படும்.
போபால் வழக்கில் ஏன் நிரூபிக்கவில்லை அரசு தரப்பு?
வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டதா?அல்லது வய்ப்பே இல்லாமல் போனதா என்பது குறித்து ஆராய்ந்து சொன்னால் அடியேன் பயன்பெறுவேன்.

Bala said...

Post romba nallaa irukku Visa. Keep writing such articles.

லெமூரியன்... said...

எதிர்மறை கருத்துக்கள் எங்கும் உள்ளது.
அதை வெளிப்படுத்துவதும் தவறன்று.
போபால் விபத்து ஒரு விபத்தாகவே இருக்கட்டும்...அந்த முதலாளியை தப்பிக்க வைத்தது
அரசாங்கம் தான்.......ஒரு நாட்டில் இருந்து தப்பித்து செல்ல அந்த முதலாளி என்ன ஜேம்ஸ் பான்ட் ஆ??
இப்படி முதலாளிகளுக்கு கால் கழுவும் அரசாங்கம் இருக்கும்போது அதற்கு கடிவாளமாக தொழிலாளருக்கு ஆதரவு இயக்கம் இருப்பதில் தவறென்ன நண்பனே???
கொள்ளை லாபம் சம்பாதிக்கதான் அவர்களும் இங்கு வருகிறார்கள் என்பதை ஏன் மறந்து போய் விடுக்ரீர்கள்????
நம்மை விட வியட்நாம் குறைந்த விலையில் நாம் செய்கிற அதே தட்டு கழுவும் வேலையே செய்ய முன்வரும்பட்சத்தில் ஒரே நாளில் அவ்வளவு வேலைகளும் அங்கு குவியும் என்பது உங்களுக்கு தெரியாததா???
இப்படி ஒரு பாதுகாபற்ற சூழலில் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் உள்ள நியாயம் ஏன் உங்களுக்கு புரிவதில்லை???
சொகுசு சிற்றூந்து மற்றும் அமெரிக்க கம்பெனியில் வேலை என்ற காரணத்தினாலா???

சே.குமார் said...

Arumaiyana pakirvunka...

nallathoru pakirvumkooda...

vazhththukkal.

satheshpandian said...

பலபேர் யார் மேல் உள்ள கோபத்தினாலோ மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களை பார்த்து கோபபடுகின்றனர். மென்பொருள் நிறுவனங்களை விட (Core industries) எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசின் நிறுவனங்கள்,வன்பொருள் நிறுவனங்களில் சம்பளம் அதிகம். ஆனால் இவர்களின் கோபம் எப்போதுமே மென்பொருள் நிறுவனங்களின் மீதே இருக்கிறது. இவர்களுக்காக மென்பொருள் நிறுவனங்களை மூடினால் நிச்சயம் இந்திய பொருளாதாரம் அடி ஆழத்திற்கு செல்லும்.

Anonymous said...

great post

VISA said...

அன்பின் லெமூரியன்,
தொழிலாளிகளுக்கான இயக்கம் தொழிலாளிகளின் உயர்வுக்கு உழைக்கலாம். முதலாளிகளின் வீழ்ச்சிக்கு உழைப்பது அபத்தம். முதலாளிகளின் சுரண்டலை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட்டுவிட்டு முதலாளிகளே கூடாதென்று சொல்வதுதற்சமயம் இருக்கும் வேலை வாய்ப்பையும் குறைக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? குறைந்த சம்பளமே ஆனாலும் இன்னும் இன்னும் வேலையில் சேர ஆட்கள் தயாராகத்தானே இருக்கிறார்கள். காரணம் என்ன? அதற்கு மாற்று யோசித்தாலே முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுவது நின்றுவிடுமல்லவா?

வியட்னாம் குறைந்த விலையில் செய்தால் முதலாளிகள் அங்கு ஓடிவிடுவார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி முதலாளிகள் அங்கே ஓடிவிட்டால் இன்று கஞ்சி குடித்துக்கொண்டிருக்கும் மக்கள் பிச்சை எடுத்தால் பறவாயில்லையா?
நான் முதலாளிகள் அங்கே ஓடுவதால் அவர்கள் நேர்மையற்றவர்கள் என்று சொல்லோமாட்டேன். அதே நேரம் அங்கே அவர்கள் ஓடினால் பாதிக்கப்படும் நம்மவர்க்கு மாற்று உங்களால் கொடுக்க இயலுமா?

பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் உள்ள ஞாய தர்மத்தை நான் புரிந்துகொள்கிறேன். அதே நேரம் இத்தனை பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் அபிவிருத்தியை நீங்கள் ஆதரிப்பதும் இல்லை. வலுவாக எதிர்க்கவே செய்கிறீர்கள். உங்கள் சித்தாந்தங்களை சமகாலத்துக்கு ஏற்ப மாற்றவேண்டிய சூழல் உருவாகிவிட்டதையாவது உணர்வீர்களா. உணர்ந்தால் மகிழ்வேன்.

சொகுசு சிற்றுந்தும் அமெரிக்க கம்பெனி வேலையும் எனக்கு வாய்க்கவில்லை தொழரே.

dineshkumar said...

வணக்கம் நண்பரே
நல்ல பதிவு
எங்க சார் நம்மாளுக ஒண்ணா கூடினாலே அதில ஒரு ஓட்ட டவுசர் வந்துப் போகுது அதையும் மீறி ஏதாவது செய்ய முற்படும்போது
முற்படுக்கைகள்
விரிக்கப்பட்டு
முறையில்லா
விசாரிக்கப்பட்டு
முத்திரை
சுமக்கிறார்கள்
நம்மைப்போல
சிலோர் ........
மன்னர் ஆட்சியில் கூட
இத்துணை கொடுமைகள்
இல
மக்கள் ஆட்சியிலோ
தன்னை தானே
விற்கும் மக்கள்........

 
Top Tamil Blogs by Tamilers