
அவனை சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று சொன்னபோது எனக்கு அழுகை வரவில்லை. அவன் கொண்டு வந்து போட்ட கைலியும் சட்டையும் இன்னும் துவைக்காமலிருந்தது. அவன் செலவுக்கு தந்த இருநூறு ரூபாய் மேஜை மேலிருந்தது. நேற்று அவன் என்னிடம் மூன்று முறை உறவுகொண்டான். அதன் பிறகு நான் இன்னும் குளிக்கவில்லை. எங்கோ அவன் பிசுபிசுத்துக்கொண்டிருப்பது அருவருப்பாய் இருந்தது. எழுந்து குளியலறைக்கு போனேன். தாழ்பால் இல்லை. இருட்டில் நிறைய கரப்பான்பூச்சிகள் தெரிந்தன. ஒரு காலத்தில் எனக்கு கரப்பான்பூச்சி என்றால் கூச்சல் போட்டு வீடே இரண்டாகிவிடும். அப்போது அப்பா கால்களாலேயே அவற்றை நசுக்குவார். பிரீச் என்ற சத்தத்தோடு அவை சாகும் போது எனக்கு உடல் கூசும். இப்போது அப்பா இல்லை.
கோட்டூர்புரம் ஹவுசிங் போர்ட் எ பிளாக்கில் எட்டாவது வீட்டில் தான் நான் இருக்கிறேன் என்று அப்பாவுக்கு கடைசி வரை சொல்லவில்லை. தெரிந்திருந்தால் என்னை வந்து பார்த்திருப்பார். அவர் அதை தெரிந்துகொண்டபோது மரித்துப்போனார். [பிரபல ரௌடி 'நாட்' ரவி தன் கள்ளக்காதலி வசந்தியோடு கோட்டூர்புரம் ஹவுசிங் போர்ட் எ பிளாக்கில் உல்லாசமாக இருந்தபோது போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டான். திருட்டு நகைகளை தன் கள்ளக்காதலி மூலமாக 'நாட்' ரவி விற்று வந்தது அம்பலமானது. இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ரவி மீது நான்கு கொலை வழக்குகள் வழிப்பறி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.வசந்தி(25) என்று என் புகைப்படம் தினத்தந்தியில் வந்திருந்தது.]
அப்பா அதை படித்தபிறகும் உயிரோடிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தார்கள். ரவி ஒரு வாரத்தில் வெளியே வந்துவிட்டான். என்னை மூன்று மாதம் கழித்து ஜாமீனில் எடுத்தான். மீண்டும் கோட்டூர்புரம் எ பிளாக் அறை எண் எட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தான். வீட்டில் ஏற்கனவே இரண்டு பெண்கள் இருந்தார்கள். நான் தலைகுனிந்தபடி ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டேன். அந்த இரண்டு பெண்களும் பகல் முழுக்க குடித்துக்கொண்டும் கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தார்கள். பிறகு பத்து மணிக்கு மேல் கிளம்பினார்கள். போகும் போது ஒருத்தி என் அருகில் வந்து குனிந்து என் உதட்டை பிதுக்கி இழுத்து "ஜெயில்ல வெண்ணையும் பாலும் தின்னு கிடந்த மாதிரி செழிப்பா இருக்கியே" என்று கேவலமாய் சிரித்தாள்.
இரண்டு பேரும் போன பிறகு அவன் வந்தான். என்னை குளித்துவிட்டு வா என்று அதட்டினான். நான் மௌனமாய் கீழ்படிந்தேன். குளித்துவிட்டு வந்து தலை துவட்டிக்கொண்டிருந்தேன். என்னை பின் பக்கமாக அணைத்து இடுப்பை நெரித்தான். நான் விலகினேன்.
"என்ன கோபமா?...பெரிய புடுங்கி மாதிரி உன்னையும் இந்த கேஸ்ல சேத்துட்டான் அந்த இன்ஸ்பெக்டர். ஓத்த சாவுறடா நீ..." என்றான் சத்தமாய். தான் ஆண் என்பதை காட்டிக்கொள்ள.
எனக்கு அந்த இன்ஸ்பெக்டர் தான் உண்மையான ஆண் என்றும் இவனுக்கு புடவை கட்டினால் எப்படியிருப்பான் என்றும் நினைத்துப்பார்க்க சிரிப்பு வந்தது. சிரித்தேன். அது அவனுக்கு பிடிக்கவில்லை. நான் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போல் இருப்பதையே அவன் விரும்புகிறான். அவன் என்னை உதறிவிட்டு பால்கனிக்கு போய் ஒரு சிகிரெட் பற்ற வைத்தான்.
நான் புடவை கட்டிக்கொண்டேன். பூ வாங்கி மேஜை மேல் வைத்திருந்தான். அதன் அருகில் ஆணுறை. நான் பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தேன். காற்று ரம்மியமாய் இருந்தது. காற்றிடம் கேட்பது போல் தான் கேட்டேன். "யார் அந்த பொம்புளைங்க....?"
"சீ....சீ....அவளுங்க பஸ் ஸ்டாண்ட் கிராக்கிங்க.....சும்ம ஒரு நாளைக்கு...அது கூட நான் கூப்பிடல.... நம்ம பசங்க தான் இங்க தங்கியிருந்தானுங்க. நீ தான் டீ எப்பவுமே இங்க பெர்மனென்ட். இந்த பேட்டைக்கே குயின் மாதிரி. உன் இடத்தை நான் யாருக்கும் விட்டு கொடுக்கல. இன்னைக்கு ரவியோட கீப்புன்னா ஒரு பய தொடுவானா?"
மந்திரம் சொல்லவில்லை தாலி கட்டவில்லை நளுங்கு வைக்கவில்லை நிச்சயதார்த்தம் இல்லை தாலி இல்லை மஞ்சள் இல்லை மெட்டி இல்லை மேளம் இல்லை தாளம் இல்லை என்ற போதும் "யார் அந்த பொம்புளைங்க?" என்று கேட்கும் அளவுக்கு எனக்கு அவன் மேல் உரிமை இருப்பது ஆறுதலாயிருந்தது.
அதற்கும் அவன் ஒரு பதில் சொல்கிறான். "நீ யாருடீ கேக்க" என்று என்னை திருப்பி கேட்கவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவனுக்கு என் மேல் கரிசனம் இருக்கிறதா? மேஜை மேலிருந்த ஆணுறை பாக்கெட்டின் அட்டையில் இருக்கும் அந்த பெண் என்னை அருவருப்போடு பார்க்கிறாள்.
சிறிது நேரம் என்னையே உற்று பார்த்துவிட்டு "ஒரு பொம்புளைன்னு பாக்காம உன்ன போய் புடிச்சு.....ஜெயில்ல ரொம்ப கஷ்டப்பட்டியா?"
என் கண்கள் இரண்டிலும் ஐஸ் கட்டி பொருத்தியது போல் உருகியது.
சிகிரெட்டை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். விளக்கை அணைத்தான். ஏதோ நினைத்தவள் ஆணுறைகளை மேஜை மேலிருந்து கீழே தள்ளிவிட்டேன். அவன் என் மேல் தீவிரமாய் படரத்தொடங்கினான். நான் எப்போதும் போல் அசைவற்று கிடந்தேன். அவன் அடிக்கடி சொல்வான் "தலகாணிய செய்யுற மாதிரி இருக்குடீ". இந்த முறை அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னையும் அறியாமல் அவன் மேல் ஈடுபடத்தொடங்கினேன். வெறும் செக்ஸ் இன்பத்திற்காக மட்டுமே என்னை ஜாமீனில் எடுத்திருப்பான் என்று என்னால் நம்பமுடியவில்லை.
என் மேலும் அவனுக்கு ஒரு பிரியம் உண்டென்று தோன்றியது. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஆறு குழந்தைகள். ஆனால் ஒரே ஒரு வப்பாட்டி. வாரத்தில் இரண்டு நாள் இங்கே வருவான். காசு கொடுத்து எதையாவது வாங்கி சமைக்கச் சொல்லுவான். சாப்பிடுவான். இதுவரை அவனுக்கு குறைவில்லாமல் பரிமாறியிருக்கிறேன். இது எந்த வகையான வாணிபம் என்று மட்டும் எனக்கு புலப்படுவதே இல்லை. தாரமும் இல்லை. தாசியும் இல்லை. பிறகு என்ன? எனக்கும் இவனுக்குமான பந்தம் என்ன?
என் மேல் இறுக்கம் கூட்டி இயங்கத்துவங்கினான். அவனை முதல் முறையாக அணைத்தேன். என்னை ஜெயிலிலேயே விட்டுவிட்டு இன்னொரு அழகியை எ பிளாக்கில் எட்டாவது வீட்டில் அவன் குடி அமர்த்தியிருக்கலாம். ஆனால் அவன் அதை செய்யவில்லை.
காலையில் எழுந்து பார்த்த போது அவன் அறையில் இல்லை. டி.வியை இயக்கிபோது தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. கீழே ஒரு பாம்பை போல மௌனமாய் "பிரபல ரௌடி நாட் ரவி இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டான்" என்று ஓடியது.
குளித்துவிட்டு வந்தேன். அவனது உடலை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்திருப்பதாக செய்தியில் சொன்னார்கள். பீரோவை திறந்தேன். எனக்கு மிகவும் பிடித்த மஞ்சள் நிற புடவையை எடுத்தேன். பட்டுப்புடவை. விதவைகள் வெள்ளை புடவை கட்டலாம். நான்? மஞ்சள் நிற புடவையில் அழகாய் இருந்தேன்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் அவனது ஆட்கள் கூடிவிட்டார்கள். நிறைய போலீஸ் இருந்தது. அவனது முதல் மனைவி கூட்டத்தில் இருந்தாள்.
தலையை அழகாக பின்னி மேஜையில் மீதமிருந்த பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன். அலமாரியில் குங்குமம் இருந்தது. ஒரு இணுக்கு கையில் எடுத்து வகிடில் ஒத்தினேன். அழகாக வட்டமாக பொட்டு வைத்துக்கொண்டேன். சூட்கேஸை திறந்தேன். உள்ளே காகிதத்தில் மடித்து இரண்டு மெட்டிகள் இன்னும் அப்படியே இருந்தது. அதை எடுத்து விரலில் போட்டுக்கொண்டேன். தாலி?
அவனது உடலை இப்போது முதல் மனைவியிடம் ஒப்ப்டைத்துவிட்டார்கள். பெரிய ரௌடி. ஏராளமான போலீஸ். ஒரு கூட்டம் சாலையை மறித்து ஏதோ ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். அவனது உடலை வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவனது இரண்டு மனைவிகளும் உள்ளே இருந்து மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். எனக்கு அவர்களின் அழுகை போலியானதெனவே தோன்றியது. ஏதோ வாய்ப்பு கேட்டு போகிற போது நடித்துக்காட்ட சொல்வார்களே அது போல் நடிக்கிறார்கள்.
சாமி படத்திற்கு அருகில் வைத்திருந்த தாலியை எடுத்தேன். தலை வழியாக கழுத்தில் அணிந்து என்னையே ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டேன். அவனது மரணத்தை கொண்டாட இதுவே உகந்த ஒப்பனை.
அவன் நேற்று கொடுத்த இருநூறு ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அவனது ஆட்கள் தெருவெங்கும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் தெருவில் இறங்கியதும் அவர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். சொடுக்கு போட்டு மழையை நிறுத்தியது போல் ஒரு அமைதி. நான் அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்தேன். ஒரு ஐம்பது ஜோடி கருவிழிகள் என்னையே பின் தொடர்ந்தன. என்னை ஆச்சரியம் கலந்த பயத்தோடு அவர்கள் கவனித்தார்கள். விலகி வழிவிட்டார்கள். நெற்றியில் குங்குமம் கழுத்தில் தாலி காலில் மெட்டி ஒரு அக்மார்க் கோமாளி வேஷம். ஆனால் யாரும் சிரிக்கவில்லை. என்னை விட்டு மரியாதையோடு விலகியே நின்றார்கள். நான் ஒரு அசையும் பிரேதத்தை போல் அந்த தெருவை கடந்து ஆட்டோவில் ஏறினேன்.
நாட் ரவியோட கீப்புன்னா சும்மாவா?.
அவனது உடலை வீட்டில் ஐந்து நிமிடம் வைத்திருக்க மட்டுமே அனுமதி . நான் வீட்டுக்கு போகவும் ஆம்புலன்ஸில் அவன் உடல் வரவும் சரியாக இருந்தது. அவன் உடலை இறக்கி பந்தலின் நடுவே கிடத்தினார்கள். அவன் முகத்தில் கால் பகுதி மட்டுமே திறந்திருந்தது.
அதிலும் இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. அவன் உதடுகள் என் கோலத்தை பார்த்து சிரிப்பது போலிருந்தது. இப்போது புதுத்தாலி முடிந்து மணவறையிலிருந்து இறங்கி பிணவறைக்கு வந்தவளைப்போல் என்னை எல்லோரும் வினோதமாய் பார்த்தார்கள். எனக்கு அழுகை வந்துவிடும் முன் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். அவனது இரண்டு மனைவிகளும் பெண் பிள்ளைகளும் அவன் சவத்தை சுற்றி அமர்ந்து சம்பிரதாயமாய் ஒப்பாரி வைத்தார்கள்.
எனக்கு அவர்களின் ஒப்பாரி சிரிப்பாக இருந்தது.
போலீஸ் மீண்டும் மீண்டும் நச்சரித்து ஒரு வழியாக அவனது சடலத்தை பாடையில் கிடத்தி அவனது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. நான் வீட்டுக்கு வந்தேன்.
என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை எடுத்து கண்ணில் ஒற்றி ஓ...வென அழுதேன். முதல்முறையாக அவனுடைய பாதுகாப்பை உணர்ந்தேன். பெண்மை எத்தனை பலகீனமானது. இரண்டு கைகளாலும் தாலியை கழுத்திலிருந்து அறுத்து எறிந்தேன். மீண்டும்
அழுதேன். நான் இப்படி மனம் விட்டு அழுது பல வருடங்கள் இருக்கும்.
அழுகையும் விசும்பலுமாய் தரையில் விழுந்தேன்.
அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஓங்கி அறைவது போல் மூன்று முறை தட்டினார்கள். எனக்கு பயம் தொண்டையை தின்றது. மெதுவாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து கதவை நோக்கி நடந்தேன். ரவியின் முகம் அறையின் சுவர்களில் பட்டு தெறித்தபடி இருந்தது. மெல்ல கதவை திறந்தேன். வெளியில் யாரும் இல்லை. இருட்டாயிருந்தது. தலையை மட்டும் கதவுக்கு வெளியே செலுத்தி வலமும் இடமும் பார்த்தேன். யாரும் இல்லை. கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்து கட்டிலில் ஒரு புள்ளியாய் குவிந்து உட்கார்ந்தேன்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் யாரோ கதவு தட்டினார்கள். என் கைகள் உதற ஆரம்பித்தது. உடல் ஏதாவது செய் என்று பதறுகிறது. என்னை செய்வது. யாரை எழுப்புவது? உறங்கிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நாட் ரவியின் வப்பாட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் யாரை எழுப்புவது? கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். "டீ கதவ திறடீ...." என்று கூச்சலிட்டார்கள். "அவனுக்கு மட்டும் தான் திறப்பியா?" என்றார்கள்.
ஏதோ சொல்லி வெளியே சிரித்துக்கொண்டார்கள். அவனுடைய சொத்துக்களை இரண்டு மனைவிகளும் சரி பாதியாய் பிரித்து எடுத்துக்கொள்வார்கள். என்னை? என்னை யார் வைத்துக்கொள்வதென்று ஏலம் விடுவார்களாம். மீண்டும் கதவை அழுத்தமாய் தள்ளியபடி தட்டினார்கள். கதவு திறந்துவிடுமோ என்று எனக்கு பயமாயிருந்தது. ஒரு நூறு ரூபாய் தாள் கதவின் இடுக்கு வழியாக உள்ளே வந்து விழுந்தது.
வெகு நேரம் கதவை தட்டுவதும் கூச்சலிடுவதும் சிரிப்பதுமாய் என்னை கலங்கடித்துக்கொண்டிருந்தார்கள். இனி மேல் இங்கே இருக்கக்கூடாதென்று தீர்மானித்தேன். எங்கே போவது? நாளை காலை விடிவதற்குள் இங்கிருந்து அப்புறப்படவேண்டும். எனக்கு தேவையானவைகளை எடுத்து ஒரு பெட்டியில் அடுக்கத்தொடங்கினேன். இரவு ஒரு மணிக்கு மேல் கதவு தட்டுவது நின்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு இறுதியாக ஒரு முறை அந்த வீட்டை பார்த்துவிட்டு கிளம்ப தயாரானேன். கதவை திறந்து வெளியே வந்தேன். எதிரில் அவன் நின்றுகொண்டிருந்தான் என்னை வழி மறித்தபடி. போலீஸ் உடையில் பொறுக்கி போலிருந்தான். அவன் பேட்ஜில் மூர்த்தி என்று படித்தேன்.
"ராத்திரி பசங்க ரொம்ப தொந்தரவு போல.....கீழேருந்து ஸ்டேஷனுக்கு போன் வந்தது. அதான் வந்தேன். இனி மேல் உனக்கு இந்த மாதிரி சில்லரை பசங்க தொல்லை எல்லாம் இருக்காது பயப்படாத. நீ இங்கேயே இருக்கலாம். செலவுக்கு இத வச்சுக்கோ என்று சில ஐநூறு ரூபாய் தாள்களை என் கையில் திணித்தான்."
அதை என்னால் உதற முடியவில்லை. அழுத்தம் அப்படி.
அன்றே இரவு எட்டு மணிக்கு வந்தான். கையில் மல்லிகை பூ வைத்திருந்தான். கூடவே ஆணுறையும். சீருடையில்லாமல் பொறுக்கியை போலிருந்தான்.
'நாட்' ரவியை என்கவுண்டர் செய்த குழுவில் மூர்த்திக்கு பதக்கமெல்லாம் கொடுத்தார்கள்.

21 comments:
அருமை.. அருமை
// டி.வியை இயக்கிபோது தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது //
இந்த கதையை படித்தபோதும் எனக்கு அந்த படத்தின் கதை பல இடங்களில் நினைவுக்கு வந்தது...
கடைசியில ஒரு 'நாட்' வச்சீங்க பாருங்க.. அது அருமை.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். ;-)
Super anne.
வித்தியாசமான கோணத்தில் இருந்து சொல்லப்பட்ட சோகம், நல்லா இருக்கு விசா.
அருமையாவன கதை.
superb writing style boss.
nallarukku
police udaiyil porukki ... nallarukku
innum naraiya azhagana varikaL nan padikkum pothu thenpattana
vaazhthugal
மனது கணக்கிறது
Super boss
wow. superb
நீண்ட இடைவெளிக்கு பிறகு மிக நல்ல கதை, மிக அருமையாக உள்ளது விசா!! பெண்மை எத்தனை பலகீனமானது - உண்மைதான்.
கதையை முடித்திருந்த விதம் மிகவும் நன்றாக இருந்தது!
superp...........
நைஸ்
அருமை
மிக அருமை
வாழ்த்துக்கள்
இதுதான் விசா
சுவாரஷ்யமா கதை சொல்றதுல இப்போதைக்கு இந்த பதிவுலகத்துல உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது..
கூடவே கருத்துகளும் சம்மட்டியடியாய்
கேப் விடாம எழுதுங்க சார் # ரசிகர் விண்ணப்பம்
Nice writing boss..
//அதை என்னால் உதற முடியவில்லை. அழுத்தம் அப்படி.//
இந்த ஒரு வரியிலேயே நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.. கதை சொன்ன விதம் மிக அருமை..!!
அருமை
சத்தியமா வாய்ப்பே இல்லைங்க ..உண்மைலேயே நான் சிறுகதை எழுதுறேன்னு இனிமேல் வெளியில சொல்ல வேண்டியதே இல்ல ..!
இந்த சிறுகதைல நூறு ஒரு பங்கு கூட என்னோட சிறுகதைகளே எல்லாம் வராது .. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல ..! ரொம்ப ரொம்ப சிலிர்க்கிற மாதிரி இருக்கு ..!
நல்ல பதிவு . . . பாராட்டுக்கள்
Post a Comment